75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றினார்- போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பு
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டமாக வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டமாக வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர தின விழா
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடியின் அறிவிப்பின் படி கடந்த 13-ந் தேதி முதலே வீடுகளிலும் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர அமுத விழாவை கொண்டாடினார்கள்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. விளையாட்டு அரங்கின் மத்தியில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான கொடி கம்பம் தயார் நிலையில் இருந்தது. மைதானத்துக்கு காலையில் இருந்தே அதிகாரிகள், பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள். காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மைதானத்துக்கு வந்து கொடி மேடையை பார்வையிட்டார். அவருக்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது.
கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்து அரசு மரியாதையுடன் வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். மைதானத்தின் நுழைவு வாயிலில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எல்.மதுபாலன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், கனகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். கிறிஸ்து ஜோதி பள்ளிக்கூட பெருவங்கி இசைக்குழு மாணவிகள் வாத்தியங்கள் முழங்க, கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் கொடி மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு காலை 9.05 மணிக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பூக்கள் சொரிந்து பட்டொளி வீசிய இந்திய நாட்டின் மூவர்ண தேசியக்கொடிக்கு அங்கு கூடி இருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். போலீஸ் இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.
போலீசாரின் அணிவகுப்பு
ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இருந்தார். தொடர்ந்து இந்திய சுதந்திரத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ண ஊதான் (பலூன்)களை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா ஆகியோர் பறக்கவிட்டனர்.
ஈரோடு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் லயோலா இஞ்ஞாசி மேரி தலைமையில் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை, சாலை பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பினை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார், வனத்துறையினர் உள்ளிட்ட அரசுதுறையினர், சமூக ஆர்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில் தேசிய கீதத்துடன் சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.
விழாவில் உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட கல்வி அதிகாரி ஜோதிசந்திரா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார், சேகர், தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், வீரலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.








