சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
ஈரோட்டில் நடந்த சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஈரோடு
ஈரோட்டில் நடந்த சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கலை நிகழ்ச்சிகள்
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசு இசைப்பள்ளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இசைப்பள்ளி மாணவ-மாணவிகள் மங்கள வாத்தியம் இசைத்து உற்சாகப்படுத்தினார்கள். கலை நிகழ்ச்சிகளின் தொடக்கமாக இசைப்பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் ஆடினார்கள்.
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மாணவ-மாணவிகள் வந்தே மாதரம் பாடலுக்கு நடனம் ஆடினார்கள். எஸ்.வி.என். பள்ளிக்கூட மாணவிகள் படுகர் இன பாடலுக்கு நடனம் ஆடினார்கள். பாரதி வித்யா பவன் பள்ளிக்கூட மாணவிகள் ஒயிலாட்டம் ஆடி கவர்ந்தனர். ஈரோடு கலை மகள் பள்ளிக்கூட மாணவிகள் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடினார்கள். குயிலி, வாஞ்சிநாதன், வேலுநாச்சியார், பூலித்தேவன், தீரன் சின்னமலை ஆகியோரின் வேடங்களை அணிந்து மாணவிகள் வந்து சுதந்திர போராட்டத்தையும் நினைவுகூர செய்தனர்.
குடும்பத்தினருடன்
இந்த கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அவரது மனைவி பிரசிதா சபரியுடனும், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், அவருடைய மனைவி மற்றும் மகன்களுடனும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எல்.மதுபாலன் அவருடைய மனைவி எம்.நந்தினியுடனும், ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடனும் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பாராட்டு கேடயம் வழங்கினார். நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் திருமலை அழகன் தொகுத்து வழங்கினார். அவருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் முதல் முறையாக தப்பாட்ட கலைஞர்களின் பறை இசை நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. பாக்கியராஜ் என்ற தப்பாட்டக்குழுவினர் பறை இசைத்தனர். பறையாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம், படுகர் நடனம் என்று பல நடன வடிவங்களை பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.