சுதந்திர தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்


சுதந்திர தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
x

இந்திய அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது.

தர்மபுரி

விழிப்புணர்வு ஊர்வலம்

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தர்மபுரி கோட்ட அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கியது.

இந்த ஊர்வலத்தை தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தர்மபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் அஞ்சல் துறை ஊழியர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பங்கேற்றனர். இந்த ஊர்வலம் தபால் நிலையத்தில் இருந்து சின்னசாமி நாயுடு தெரு, பஸ் நிலையம், மற்றும் ராஜகோபால் பூங்கா வழியாக மீண்டும் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

எளிதில் கிடைக்கும்

இதுகுறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவருக்கும் தேசியக்கொடி எளிதில் கிடைக்கும் வகையில் தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூபாய் 25 மட்டுமே. ஜி.எஸ்.டி. கிடையாது.

தேசியக்கொடியை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். எனவே பொதுமக்கள் தபால் நிலையங்களில் தேசியக்கொடியை வாங்கி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.


Next Story