தேனியில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா:ரூ.26 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் ஷஜீவனா தேசிய கொடியை ஏற்றி வைத்து வழங்கினார்
தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷஜீவனா தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார்.
பின்னர் கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பயணித்து போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆயுதப்படை பிரிவு போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குழுவினரின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் பறக்கவிட்டு, தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 13 ஆயிரத்து 59 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உள்பட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 205 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
கலை நிகழ்ச்சிகள்
பின்னர் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேசப்பற்று பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடினர். மேலும் சிலம்பம் ஆடியும் மாணவ, மாணவிகள் அசத்தினர். அவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.