2024-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்:மக்கள் நலனுக்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி
சேலம்
2024-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மக்கள் நலனுக்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம் என்றும் சேலத்தில் முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ஊர்வலம்
ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சேலம் அம்மாப்பேட்டையில் நேற்று மாலை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், மோதல்கள், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை மூடிமறைத்ததன் காரணமாக இந்தியாவை இந்தியா என்று அழைப்பதற்கு பயந்து பாரத் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்கின்றனர். நாட்டின் பெயரை மாற்றலாம். ஆனால் 2024-ம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் இந்தியா பெயர் இருக்கும். மக்கள் நலனுக்காவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். மக்கள் எங்களது கூட்டணி பக்கம் இருக்கிறார்கள். 2024-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எந்த நிலைப்பாட்டை பா.ஜ.க. எடுத்து வந்தாலும் அதிலிருந்து தவறாமல் மக்களை காப்பாற்றுவோம்.
கருத்து கூற உரிமை உள்ளது
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள், முதல்-அமைச்சர்கள், அனைத்து தரப்பினரை அழைத்து பேசியிருக்க வேண்டும். சனாதனத்தை பற்றி பேசுவது தவறில்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் கருத்து கூற உரிமை உள்ளது. கருத்து கூறுவதற்கு தலையை வெட்ட வேண்டும் என்று கூறுவது சரியானது அல்ல.
ஜனநாயகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் உள்ளது. அந்த உரிமைகளை பயன்படுத்தி கருத்துகளை நிலை நாட்ட வேண்டும். அந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டால் வலிமை பெறும். அதேபோன்று இந்தியா கூட்டணியின் கருத்து மக்களை ஒருங்கிணைப்பது, இந்தியாவை காப்பது என்பது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஊர்வலத்தில் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர் கிரிஜா குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, பிரபு, ஷேக் இமாம், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.