வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்துள்ளது
பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்துள்ளது என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்தியமந்திரி எல்.முருகன் கூறினார்
கள்ளக்குறிச்சி
செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெருமை கொள்ள வேண்டும்
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளதன் மூலம் தாய்மொழி கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் ஜி-20 மாநாடு வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் தான் நடைபெறும்.
ஆனால் முதல் முறையாக நமது இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிதான். இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக நாடுகளின் தலைவர்கள் நம்முடைய நாட்டிற்கு வர உள்ளார்கள்.
11 மருத்துவ கல்லூரிகள்
நாட்டில் கல்வி, மருத்துவம், நிர்வாகம், ரெயில்வே, விமானம், கப்பல் உள்ளிட்ட அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நூறு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது நேரடியாக மக்கள் கையில் 100 ரூபாயாக வந்து சேரும் வகையில் உள்ளது.
கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ள வைத்துள்ளது. கழிப்பறை திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
5-வது இடத்தில்...
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இங்கிலாந்து நாட்டை பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது இடத்தில் நாம் உள்ளோம். 2027-ல் 3-வது நாடாக வர உள்ளோம் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லக்கூடிய பெரும் பங்கு வழக்கறிஞர்களாகிய உங்களுக்கும் உள்ளது. நாம் 2024-ம் ஆண்டு வரக்கூடிய தேர்தலை நோக்கி இருக்கிறோம். எனவே நீங்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
வல்லரசு நாடாக...
2047-ம் ஆண்டு உலக நாடுகள் வியக்கும் அளவில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும். அதற்கு மீண்டும் 2024-ல் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும். அதற்கு தமிழகத்தில் இருந்தும் எம்.பி.யை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.