உணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியா திகழ்கிறது


உணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியா திகழ்கிறது
x
தினத்தந்தி 27 May 2023 1:15 AM IST (Updated: 27 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

உணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியா திகழ்கிறது

கோயம்புத்தூர்

கோவை

உணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியாக திகழ்கிறது என்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறு தானிய கருத்தரங்கில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி-2023 கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதன் நிறைவு விழா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

200 ஆண்டு கால காலனியாதிக்கத்தில் நமது விவசாயத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள். ஆனால் விவசாயப் புரட்சியின் மூலம் இப்போது தரமான உணவுகள் கிடைக்கின்றன. இப்போது போதுமான உணவு மட்டுமல்ல, உணவு உற்பத்தியில் உபரி நாடாக இந்தியா திகழ்கிறது. இது விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் செய்த அதிசயம்.

நீரழிவு நோயாளிகள்

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் அரிசியை அதிகமாக சார்ந்திருப்பது. ஆகவே நோயை தடுக்க சிறுதானிய உணவு சிறந்தது. சிறுதானிய பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே போதும். நிலையான,ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சிறுதானியங்கள் தேவை.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பழமொழி உலக அளவில் பல பிரச்சினைகளுக்கு தீர்வாகும். சர்வ தேச அளவில் காலநிலை மாற்ற பாதிப்பு உள்ளது. பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனை கருத்தில் கொண்டு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி எரிசக்திக்கான மாற்றத்தை முன்வைத்தார். சூரிய ஒளி மற்றும் சுத்தமான எரிசக்திக்கு செல்ல வேண்டும் என உலக நாடுகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிறுதானிய உணவு கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு வகையான சிறுதானியங்கள், கேப்பை மற்றும் கேழ்வரகு செடிகள் உள்ளிட்டவற்றை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார். அப்போது அங்கு சிறுதானியங்களால் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அவர் சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைெழுத்திடப்பட்டு பரிமாறி கொள்ளப்பட்டன.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி, விவசாயிகள், பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த கருத்தரங்கில் விவசாயிகள், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story