மு.க.ஸ்டாலினை இந்தியாவே உற்றுநோக்குகிறது-ஆ.ராசா எம்.பி.
‘நம்பர் ஒன் முதல்-அமைச்சர்’ என்று பெயர் எடுத்த மு.க.ஸ்டாலினை இந்தியாவே உற்றுநோக்குகிறது என ஆ.ராசா கூறினார்.
'நம்பர் ஒன் முதல்-அமைச்சர்' என்று பெயர் எடுத்த மு.க.ஸ்டாலினை இந்தியாவே உற்றுநோக்குகிறது என ஆ.ராசா கூறினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் பட்டுக்கோட்டை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி பாலு, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் பழஞ்சூர் செல்வம், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரசபை தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
'நம்பர் ஒன் முதல்-அமைச்சர்'
அண்ணா, காமராசர், பெரியார் உள்ளிட்டோரின் சமூகநீதி கண்ணோட்டங்களை கொண்டுபோய் சேர்ப்பதன் வாயிலாக இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெயரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். அவரை இந்தியாவே உற்று நோக்குகிறது.
திராவிட மாடல் ஆட்சியை மேலும் ஒரு நூற்றாண்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமை இருக்கிறது.
நீட் வேண்டாம்
நீட் தேர்வுக்கு 17 மாணவர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். இதை கண்டித்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்துள்ளது. எல்லா சமுதாயத்திலும் ஒவ்வொருவர் இறந்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்டோம். எல்லோரும் சேர்ந்து ஒருமனதாக சட்டம் நிறைவேற்றி அனுப்பினோம். 8 கோடி தமிழர்களும் எழுந்து நின்று எங்களுக்கு நீட் வேண்டாம் என்று குரல் கொடுத்து சட்டத்தை நிறைவேற்றினோம்.
அந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரே கையெழுத்து போட்டாலும் நான் போட மாட்டேன் என்று சொல்லுகின்ற கவர்னர் ராஜ்பவனில் இருக்கிறார் என்றால் அதையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.