தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும்என்று மத்திய உள்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம். இது இந்தியாதான்.'ஹிந்தி'யா அல்ல!"

ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் இந்தியாவின்'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற பண்பாட்டிற்கு எதிரானது.

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. அரசில் அலுவல் மொழியே. உள்துறை அமைச்சர் இந்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக, 'உள்ளூர் மொழி'களையும் தனக்குக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

உள்ளூர் மொழிகள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் 'இந்திய மொழிகள் நாள்' எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story