இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூரில் பழங்குடி இன பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தேவாலயங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதை கண்டித்தும் வேலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் தலித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தென்காந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொருளாளர் கவுரிசங்கர், ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் தமிழகம், புதுவை ஒருங்கிணைப்பாளரும் தேசிய செயலாளருமான ஏ.இஸ்மாயில், மாநில செயலாளர் ஷமில்அகமது ஆகியோர் பேசினர்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் சம்பவங்களை கண்டித்தும் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் குடியரசு கட்சியின் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தயாளன், மாவட்ட துணை செயலாளர் சின்னப்பதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சாமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.