இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் பொதுக்குழு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை தாங்கினார். மஹ்மூதுல் ஹசன் வரவேற்றார். ஏரல் சாகுல் ஹமீத் கிராஅத் ஓதினார். துணைத்தலைவர் பாதுல் அஸ்ஹப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர், செயலாளராக எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன், பொருளாளராக கே.மீராசா மற்றும் 6 துணைத்தலைவர்கள், 6 துணை செயலாளர்கள், 6 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் காயல்பட்டினத்தில் வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளானவர்கள் கலந்து கொள்வது, நபிகள் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடியின் அனைத்து பகுதிகளிலும் தரமான சாலை அமைக்க வேண்டும். காயல்பட்டினத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும், ஆறுமுகநேரி-நெல்லை சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொருளாளர் ஷாஜகான், துணை செயலாளர் இப்ராகிம் மக்கீ உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கே.மீராசா நன்றி கூறினார்.