இந்திய ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும்
வரும் 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
கோவை
வரும் 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
ஆசிய ஜவுளித்துறை மாநாடு
தென்இந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவை யொட்டி, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ஆசிய அளவிலான ஜவுளித்துறை மாநாடு கோவை-அவினாசி ரோடு தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் ஜவுளித் துறையில் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை மத்திய ஜவுளி, ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து மாலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல், இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், சைமா தலைவர் ரவி சாம் ஆகியோர் வரவேற்று பேசும் போது, இந்தியாவில் பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதால் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து மத்தியமந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-
ரூ.30 லட்சம் கோடி
கடந்த ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தாலும், ஜவுளி ஏற்றுமதி 500 பில்லியன் டாலரில் இருந்து 676 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. ஜவுளித்துறையில் இந்தியாவின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. வருகிற 30 ஆண்டுகளில், ஜவுளி பொருளாதாரம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும்.
மிகவும் தரமான உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகள் உதிரிபாகங்களில் அதிகளவு முதலீடுகள் செய்யும் நாடுகள் ஆகும். அதை இந்திய ஜவுளி தொழிற்துறையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஜவுளித்துறையில் இந்தியா மிகப் பெரிய நுகர்வோர் மட்டுமின்றி ஜவுளித்துறையின் மையமாகவும் உள்ளது.
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியதை, செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். ஒரே குடும்பம் என்ற எண்ணம் கொண்டு வளர்ச்சியை யும், நிலையான வளத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
உலக தலைவர்கள் பிரதமர் மோடியை அன்புமிக்க, பிரபலமான தலைவராக பார்க்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அந்த அங்கீகா ரத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கானது என்று கூறி உள்ளார். எனவே நமது கடமையை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் அனைவ ரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா இழந்த புகழை மாற்றி, மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மத்திய இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பேசும் போது, அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் ஜவுளித்துறை, மத்திய அரசின் நடவடிக்கைகளால் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.
கைத்தறி துறை அமைச்சர்
தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜவுளித்துறையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய மந்திரி பியூஷ் கோயல் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறந்த மனிதர். அவர் தமிழ் நாட்டுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்றி தர வேண்டும். மெகா ஜவுளி பூங்கா அவரது முயற்சியால் தமிழகத்துக்கு வர நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.