எச்.புதுப்பட்டியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா: தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


எச்.புதுப்பட்டியில் அ.தி.மு.க. கொடியேற்று விழா:  தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை  எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று எச்.புதுப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. கொடியேற்று விழாவில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று எச்.புதுப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. கொடியேற்று விழாவில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க. கொடியேற்று விழா

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி எச்.புதுப்பட்டியில் அ.தி.மு.க. கொடி யேற்று விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ராஜமுத்து, மாநில அமைப்பு செயலாளர் சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நல்லத்தம்பி வெள்ளி வீரவாள் வழங்கினார். விழாவில் மாற்று கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய நகரங்களுக்கு இணையான திட்டங்களை செயல்படுத்தினோம். தரமான சாலைகள் அமைக்கும் திட்டம், குடிமராமத்து பணிகள் திட்டம், தடுப்பணைகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இல்லம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ.1,000-த்தில் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லி கொள்ளும் தி.மு.க. ஆட்சி லஞ்சம் பெறுவதில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது. போதை பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளது.

மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், விஸ்வநாதன், சேகர், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பெரிய கண்ணு, பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் தென்னரசு, பொ.மல்லாபுரம் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.


Next Story