மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 5-வது முறையாக ஒத்திவைப்பு


மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 5-வது முறையாக ஒத்திவைப்பு
x

கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

உள்ளாட்சி தேர்தல்

கரூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக துணைத்தலைவராக இருந்த முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் சட்டமன்ற தேர்தலில் முத்துக்குமார் தோல்வி அடைந்தார்.

தி.மு.க. வெற்றி

இதனைதொடர்ந்து தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வார்டு எண் 8-க்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மீண்டும் முத்துக்குமாரும், தி.மு.க. சார்பில் கண்ணையனும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதையடுத்து அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 2 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க.வின் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 3-ல் இருந்து 6-ஆக உயர்ந்தது. அ.தி.மு.க.வின் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 9-ல் இருந்து 6-ஆக குறைந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க. சமபலத்துடன் இருந்தனர்.

4 முறை ஒத்திவைப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் ஏற்கனவே 4 முறை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் முன்பு மற்றும் கூட்ட அரங்கிற்கு வெளியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அ.தி.மு.க.வினர் தர்ணா

அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 6 பேர் கூட்ட அரங்கிற்கு செல்வதற்காக பிற்பகல் 2 மணியளவில் வந்தனர். அப்போது கூட்ட அரங்கு கதவு மூடப்பட்டு இருந்ததுடன் அதில் அறிவிப்பு நோட்டீசு ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், கரூர் மாவட்ட ஊராட்சியில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கு 2.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற இருந்த மறைமுக தேர்தலுக்கான நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் அங்கு தரையில் அமர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஊராட்சி செயலாளருமான குருவம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அ.தி.மு.க. கவுன்சிலர்களிடம் கடித நகல் ஒன்றை வழங்கினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதில் கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாலும், பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் எனவே மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மறைமுக தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது பலத்தை காட்ட முயற்சிப்பார்கள் எனவும், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கவும், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்திட உகந்த சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதனைதொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

சட்டம்-ஒழுங்கு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமா ன எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதை ஒப்புக்கொள்ளும் விதமாக கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அண்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள பிரதமர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 11-ந் தேதி நடைபெற உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி இருப்பதால் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூறுவது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இதை ஒரு காரணமாக கூறி தேர்தலை ஒத்தி வைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் இந்த நிகழ்வு குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story