102 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம் சான்றிதழ்
ஜமுனாமரத்தூர் தாலுகாவில் 102 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம் சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
ஜமுனாமரத்தூர் தாலுகாவில் 102 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம் சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
வன உரிமை பாத்தியம் சான்றிதழ்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜமுனாமரத்தூர் தாலுகாவில் தகுதியுள்ள அனைவருக்கும் விடுதலின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டின் போது 165 பேருக்கு மட்டும் தனிநபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டிருந்தது. சமூக வன உரிமை பாத்தியம் ஏதும் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து ஜமுனாமரத்தூர் தாலுகாவில் தகுதியுள்ள அனைவருக்கும் விடுதலின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டது.
இதனையடுத்து ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமூக மற்றும் தனி நபர் வன உரிமை பாத்தியத்திற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி 89 கிராமங்களுக்கான சமூக வன உரிமை பாத்தியம் மற்றும் 102 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியத்திற்கான சான்றிதழை வழங்கினார்.
1,569 பயனாளிகளுக்கு...
அப்போது அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் 154 கிராமங்களை சார்ந்த வனச்சரக பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு 49 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பு வன நிலத்திற்கு சமூக வன உரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் 4-வது அதிக எண்ணிக்கையாக 1,569 பயனாளிகளுக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் சமூக வன உரிமை பாத்தியம் பெற தகுதியானவர்கள் எவரும் விடுபட்டிருந்தால் அவர்களும் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்' என்றார்.
நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சமி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.