மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்திசிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.2 கோடிக்கு உற்பத்தி முடக்கம்


மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்திசிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.2 கோடிக்கு உற்பத்தி முடக்கம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:30 AM IST (Updated: 26 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

தொழிற்சாலைகளுக்கான நிலை மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.2 கோடிக்கு உற்பத்தி முடங்கியது.

வேலைநிறுத்தம்

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டு உள்ள 430 சதவீத நிலை மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர கட்டணம் (பீக் ஹவர்) உயர்வை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்தது.

மேலும் நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசியேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. திட்டமிட்டப்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி சிறு, குறு தொழிற்சாலைகள், லாரி பாடி பில்டர்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன.

ரூ.2 கோடிக்கு உற்பத்தி முடக்கம்

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தலைவர் இளங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், மதுரையில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளும், பாடி பில்டர்ஸ் நிறுவனங்கள், ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் உள்பட சுமார் 1,000 தொழிற்சாலைகளும் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

நாமக்கல் மாவட்டம் ழுமுவதும் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். மாவட்டத்தில் ரூ.2 கோடி அளவுக்கு தொழில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதற்கு காரணம் நிலையான மின் கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது ஆகும்.

அடுத்தகட்ட போராட்டம்

இந்த மின் கட்டணம் உயர்வால், தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச கட்டணத்தை குறைக்க வேண்டும். 'பீக் ஹவர்' மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் போராட்டம் தொடரும், அடுத்தகட்ட போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது ஆல் மோட்டார்ஸ் அசோசியேசன் செயலாளர் விஜயகுமார், நாமக்கல் பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தங்கவேல், தேங்காய் நார் உற்பத்தியாளர் சங்க செயலாளர் தசரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story