மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாத்திட விலையில்லா சைக்கிள்கள்
மாணவா்களின் உடல்நலத்தை பாதுகாத்திட தமிழக அரசால் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
விலையில்லா சைக்கிள்கள்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலை கிருங்காகோட்டை ஆகிய பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிரான்மலை ஊராட்சியிலுள்ள வள்ளல் பாரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 70 மாணவர்களுக்கும், கிருங்காக்கோட்டை ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
பெருமை சேர்க்க வேண்டும்
விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில்,
மாணவர்களின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களை பெறும் மாணவர்கள், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்த நவீன காலத்தில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்து கொள்வது மிகவும் அவசியம்.
தமிழ்நாடு முதல்- அமைச்சரால் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது பெற்றோர்களுக்கும், தங்களது ஆசிரியர்களுக்கும், தாங்கள் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஊக்கத்தொகை
மேலும் இந்நிகழ்ச்சியில் இந்த பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையாக முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10,000-ம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5,000-ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3,000-ம் மற்றும் பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென, புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கண்ட பள்ளிகளுக்கு தலா ரூ.10,000-ம் அமைச்சர் பெரிய கருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
விழாவில் பிரான்மலை ஊராட்சி தலைவர் ராமசுப்பிரமணியன், கிருங்காக்கோட்டை ஊராட்சி தலைவர் அகிலா கண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, வட்டாட்சியர் சாந்தி சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் கதிர்வேல், நகர அவை தலைவர் சிவக்குமார், சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை தலைவர் ஆனந்த கிருஷ்ணன், அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் புகழேந்தி, துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர் மற்றும் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.