பச்சிளம் குழந்தை வாய்க்காலில் மூழ்கி சாவு
குளித்தலை அருகே விளையாடி கொண்டிருந்த பச்சிளம் குழந்தை வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.
1½ வயது குழந்தை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வடக்கு மையிலாடி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி திவ்யபாரதி. இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பிரதிஷா (வயது 1½) என்ற பெண் குழந்தை இருந்தது.
திவ்யபாரதிக்கு ஊர்க்காவல் படையில் பணி இல்லாதபோது தையல் வேலைக்கு செல்வது வழக்கமாம். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது தனது குழந்தையை குளித்தலை அருகே குட்டப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். அதுபோல நேற்று திவ்யபாரதி வேலைக்கு செல்லும்ேபாது தனது குழந்தையை தனது தாயார் வீட்டில் விட்டு விட்டு வேலை சென்றுள்ளார்.
தண்ணீரில் மூழ்கி சாவு
இந்தநிலையில் தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பிரதிஷா எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த வாரி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து மூழ்கியது. இதையறிந்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாய்க்காலில் குதித்து குழந்தையை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பிரதிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாணிக்கம் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.