ஆற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தை; வீசிச்சென்றது யார்? போலீசார் விசாரணை
ஆற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
பிணமாக மிதந்த பெண் குழந்தை
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் உள்ள முண்டனார் கோவில் அருகில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடினர். அப்போது ஆற்றில் மர்மமான பொருள் மிதந்து வருவது போல் தெரிந்துள்ளது. இதையடுத்து சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பார்த்தபோது, பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தையின் பிணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் பிணத்தை சிறுவர்கள் தூக்கி வந்து கரையில் வைத்தனர். மேலும் இது குறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் போலீசார், குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை ஆற்றில் வீசி கொல்லப்பட்டதா? அந்த குழந்தையை வீசியது யார்? என்பன உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.