தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது அமைச்சர் சேகர்பாபு தகவல்


தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில்    ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது    அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

விழுப்புரம்

செஞ்சி,

சிங்கவரம் ரங்கநாதர் கோவில்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் சென்று வர ஏதுவாக மலைப்பாதை அமைக்கவேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு ரூ.2 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கியதோட, அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ரங்கநாதரை வழிபட்டனர்.

மலைப்பாதை அமைய உள்ள இடத்தில் ஆய்வு

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் கோவில் பகுதியில் மலைப்பாதை அமைய உள்ள இடத்தையும், பாதை அமைக்கும் திட்டத்துக்கான வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, இந்து சமய அறநிலை துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சிவக்குமார், தாசில்தார் பழனி, செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க.ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பேட்டி

முன்னதாக மரக்காணம் பூமீஸ்வரர் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில்களிலும் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். மரக்காணத்தில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் ரூ.80 லட்சம் செலவில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடி செலவில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் ரூ.100 கோடி செலவில் 80 கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story