எலி மருந்து விற்க நிரந்தர தடை-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் விற்பனை தடையும், எலி மருந்துக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் விற்பனை தடையும், எலி மருந்துக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
60 நாட்கள் தடை
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
விவசாயிகளால் பூச்சி கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வரும் மோனோகுரோடோபாஸ், குளோர்பைரிபாஸ், புரோப்பனோபாஸ், அசிபேட், புரோப்பனோபாஸ் சைபர்மெத்தின் கலவை மற்றும் குளோர்பைரிபாஸ் சைபர்மெத்ரின் கலவை ஆகிய 6 பூச்சி கொல்லி மருந்துகளை விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்புகளை இந்த மருந்துகள் ஏற்படுத்துகின்றது என வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் உயர்மட்டக்குழு ஆகியவை இவ்வகை பூச்சி கொல்லி மருந்துகளை விற்பனை செய்திட 60 நாட்களுக்கு தற்காலிக தடை விதிக்கும்படி பரிந்துரைத்துள்ளன.
எலிபேஸ்ட்டுக்கு நிரந்தர தடை
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி மேற்காணும் 6 பூச்சி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டு, இத்தடையாணை அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்படிருந்தது. அதன்படி இந்த மாதம் 1-ந் தேதியன்று இந்த தடை ஆணையானது அரசிதழில் வெளியிடப்பட்டு அன்றிலிருந்து 60 நாட்களுக்கு மேற்காணும் 6 பூச்சி மருந்துகளின் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலிபேஸ்ட் என்ற அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகள், தற்கொலைக்காக பொதுமக்களிடையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள தனியார் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந்் தேதி வரையில் மேற்கண்ட 6 பூச்சி மருந்துகள் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
எனவே விவசாயிகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேற்காணும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், இதற்கான மாற்று மருந்து விவரங்களை வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதனை வாங்கி பயன்படுத்துமாறும், விற்பனை தடை காலத்தில் மேற்கண்ட பூச்சி மருந்துகள் விற்பனை செய்தால் விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.