சமூக வலைதளத்தில் பரவிய தகவல் - தமிழக மின் வாரியம் மறுப்பு
வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், வர்த்தக கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், வர்த்தக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1-ம் தேதி உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விவசாய இணைப்புகள் என மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில் வீட்டு மின் இணைப்புகள் 2.42 கோடி மட்டுமே. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவது போல, வர்த்தக கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல் பரவியுள்ளது. அது தவறான தகவல் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 601 பேர் மட்டுமே 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இது மொத்த வீட்டு இணைப்புகளில் 4.08 சதவீதம். இவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்துவதாகவும், மற்ற 96 சதவீத பேர் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.