தகவல் தொழில்நுட்ப பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட மற்றும் அனிமேஷன் பயிற்சி இணையதளம் வழியாக பயிற்றுவித்து முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சி பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் 18 வயது முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் தனியார் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.