ரூ.1 கோடியில் பெரிய ஏரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி
மங்கலம் ஊராட்சியில் ரூ.1 கோடியில் பெரிய ஏரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் அருகே மங்கலம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியை ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதனை கலெக்டர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் 3 மதகுகள், 2 களங்களை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், கரைகளை சீரமைத்தல், ஏரிக்கு நீர்வரத்து வழி மற்றும் நீர் வெளியேற்றும் வழித்தடம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை நல்ல தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து பாணாவரம் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்..
அப்போது கர்ப்பிணிகளுக்கு முறையாக பரிசோதனைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பதையும், தொடர்ந்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் தினமும் எவ்வளவு பேர் மருத்துவம் பார்க்க வருகிறார்கள் என்பதை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.