திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனை


திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனை
x

திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி

திருச்சி:

மெட்ரோ ரெயில் சேவை

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் பேசியதாவது:-

சாத்தியக்கூறு ஆய்வு

தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. திருச்சி மாநகராட்சியிலும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும், விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்துக்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும். மேலும், இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விரிவான அறிக்கை

திருச்சி மெட்ரோ ரெயில் சேவை திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்புநிதி சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும். ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்துக்கு உகந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன முதன்மை மேலாளர்கள் கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story