கத்திக்குத்தில் காயமடைந்தடாஸ்மாக் ஊழியர் சாவு; கொலை வழக்காக மாற்றம்


கத்திக்குத்தில் காயமடைந்தடாஸ்மாக் ஊழியர் சாவு; கொலை வழக்காக மாற்றம்
x

நெல்லை அருகே கத்திக்குத்தில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே கத்திக்குத்தில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்

நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் இளவரசன் என்ற ஆஷா (வயது 32). இவர் பேட்டை- கருங்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இளவரசனை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் இளவரசன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி இரவில் இளவரசன், பேட்டை அசோகர் தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் திடீரென்று கத்தியால் இளவரசனை குத்தினர். மேலும் கம்பியாலும் தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த இளவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும், இளவரசனுக்கும் இடையே இடப்பிரச்சினை ஏற்பட்டதும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும்,

சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மாரியப்பன் உள்ளிட்ட கும்பல், இளவரசனை கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியதும் தெரிய வந்தது.

கொலை வழக்காக மாற்றம்

இதுதொடர்பாக மாரியப்பன், அவருடைய மனைவி சுடலி, மகன் மாதவன் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீது போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, மாதவன் மற்றும் சிறுவனை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளவரசன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீதான கொலைமுயற்சி வழக்கை கொலைவழக்காக போலீசார் மாற்றினர். மேலும் தலைமறைவான மாரியப்பன், சுடலி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story