மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறிப்பு
x

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை பறித்து சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை பறித்து சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மனுகொடுக்க வந்தனர்

அணைக்கட்டு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. புலிமேடு பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரின் மனைவி கலாவதி (வயது 63), மகள் ஜெயலட்சுமி (29), இவரது மகன் கபிலன் (9) ஆகிய 3 ேபரும் இன்று தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பட்டா மாற்றுவதற்காக மனு கொடுக்க வந்துள்ளனர்.

அங்கு முதல் தளத்தில் நின்று கொண்டிருந்த போது, அடையாள அட்டையுடன் வந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர் அவர்களிடம் எதற்காக வந்து இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளார். அவர்கள் பட்டா மாற்றுவதற்காக மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

உடனே அந்த நபர் பட்டா மாற்றுவதற்கு மனு கொடுக்க நீண்ட நேரம் ஆகும். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக பட்டா மாற்றித் தருவார்கள். எனக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளார்.

உடனே கலாவதி அவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முயன்றுள்ளார். அதற்கு அந்த நபர் எல்லோரும் உள்ளார்கள், அலுவலகத்துக்கு வெளியே வந்து பணத்தை கொடுங்கள் என்று கலாவதியை தாலுகா அலுவலக பின்பக்கமாக அழைத்து சென்றுள்ளார்.

நகை பறிப்பு

அங்கு கலாவதி கழுத்தில் அணிந்திருந்த டாலர் செயினை பறிக்க முயற்சி செய்து உள்ளார். உஷாரான கலாவதி டாலரை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். இதனால் 4 பவுன் செயின் மட்டும் மர்ம நபர் கையில் சிக்கி உள்ளது. அந்த செயினுடன் நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கலாவதி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story