ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்


ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்
x

பொறையாறு அருகே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி வாலிபர் ஒருவர் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

வீரசோழன் ஆறு

காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா வழியாக சென்று தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகாலாக பயன்படும் முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.இதனால், ஆற்றில் கழிவுநீர் நிரம்பி கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. மேலும், கோழி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ெதாற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கழிவுநீர் கலக்கும் தண்ணீரால் விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வீரசோழன் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூதன போராட்டம்

இந்தநிலையில் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்தும், ஆற்றை சுத்தப்படுத்த கோரியும், ஆற்றில் கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இலுப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கதிரவன் (வயது 30) என்பவர் ஆற்றின் உட்பகுதியில் இறங்கி தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.அப்போது அந்த வழியாக ஆய்வுக்கு சென்ற மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பொதுமக்கள் கூட்டமாக நின்றதை பார்த்ததும் காரை விட்டு கீழே இறங்கி விசாரணை நடத்தினார். அப்போது வாலிபர் ஒருவர் தலைகீழாக நிற்பதாக பொதுமக்கள் கூறினர். உடனே, அந்த வாலிபரிடம் சென்ற கலெக்டர், ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், உங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை அவர் ஏற்று போராட்டத்தை கைவிட்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி

போராட்டத்தின் காரணமாக கதிரவன் சோர்வாக காணப்பட்டதால் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story