விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நொண்டி விளையாடி நூதன போராட்டம்

மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நொண்டி விளையாடி நூதன போராட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பின்னர் விவசாயிகள் நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
பழைய நடைமுறையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பின் மாவட்டத்திலுள்ள எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தங்களின் நெல்லை விவசாயிகள் விற்பனை மேற்கொள்ளலாம்.
ஆனால் புதிய நடைமுறையின்படி விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டுமே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
எனவே, புதிய நடைமுறையை மாற்றி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்று திருவண்ணாமலை - வேலூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நொண்டி விளையாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய உள்ள புதிய நடைமுறையால் விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
உடனடியாக நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் உற்பத்தி செய்த நெல் அனைத்தும் வீணாகிவிடும் என்றனர்.
---






