விவசாயி வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு

விவசாயி வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் திருடிய பணத்தில் ரூ.5½ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சமுத்திரம் தண்டராம்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபியுல்லா (வயது 68). இவர் மெடிக்கல் டிபார்ட்மென்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி இணையதள லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்த லிங்கை பயன்படுத்தி அப்டேட் செய்து ஓ.டி.பி. (one time password) பகிர்ந்து உள்ளார்.
இதையடுத்து அவரது செல்போன் எண் இணைப்பில் இருந்த வங்கிக்கணக்கில் இருந்து .6 லட்சத்து 95 ஆயிரத்து 788 ரூபாயை மர்ம நபர்கள் திருடிவிட்டனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான் போலீசார் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார், பாதிக்கப்பட்ட முகமதுஷபியுல்லா வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 78-ஐ மீட்டு அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தனர். அதற்கான காசோலையை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் முகமது ஷபியுல்லாவிடம் வழங்கினார்.