வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக விசாரணை: போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக விசாரணை: போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது முகாந்திரம் குறித்து விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் மீது, இவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது கடந்த ஜூன் 10-ந் தேதி இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, ஸ்டாலின் உள்ளே வந்து தன் காலை தொட்டார். விழித்து பார்த்தபோது, வெளியில் இதை சொல்லக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்தார் என்று புகாரில் அந்தப்பெண் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரை கைது செய்ய வலைவீசி தேடி வந்தார். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

உண்மைத்தன்மை

இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு ஆவணங்களை பார்த்தபோது, மனுதாரருக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் சிவில் வழக்கு தொடர்பாக பிரச்சினை உள்ளது என்பது தெரிகிறது. ஆனாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தப்பெண்ணிடம் வாங்கிய புகாரின் உண்மைத்தன்மையை அறிய ஆரம்பக்கட்ட விசாரணையை கூட நடத்தாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்து மனுதாரரை கைது செய்ய விரட்டி வருகிறார்.

நடவடிக்கை

எனவே, இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தவேண்டும். அந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது ஏதேனும் தவறு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நடவடிக்கைகளை 6 வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

பின்னர், அது தொடர்பான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்குகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story