தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மானியம்
தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மானியம்
போடிப்பட்டி
தென்னையில் காண்டாமிருக வண்டால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கும் வகையில் அவற்றைக் கட்டுப்படுத்த மானிய விலையில் உபகரணங்களை வேளாண்மைத்துறையினர் வழங்குகின்றனர்.
ஒளிச்சேர்க்கை
தென்னை மரங்களில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பூச்சிகளில் காண்டாமிருக வண்டு முதலிடம் பிடிக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.இந்த வண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கையில் பாதிப்பு ஏற்படுவதுடன் விளைச்சலும் பெருமளவு குறைகிறது.எனவே காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களுடன் மானிய விலையில் பொருட்களையும் வழங்குவதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தென்னை மரங்களில் சேதத்தை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இனக்கவர்ச்சிப்பொறி
பொதுவாக காண்டாமிருக வண்டுகள் மக்கும் நிலையில் உள்ள குப்பைகள் மற்றும் உரக்குழிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.எனவே தென்னந்தோப்புகளின் அருகில் காண்டாமிருக வண்டுகளின் இனப்பெருக்கத்துக்கான சூழல் இல்லாமல் தவிர்ப்பது நல்லது.மேலும் அவற்றின் புழுக்களைக் கட்டுப்படுத்த உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற பூஞ்சாணத்தைத் தெளிக்கலாம்.அல்லது மரத்துக்கு 40 கிராம் என்ற அளவில் மரத்தைச் சுற்றி தூவி விடலாம்.இந்த மெட்டாரைசியம் வேளாண்மைத்துறையின் மூலம் 50 சதவீதம் மானிய விலையில் 4 கிலோ ரூ. 270-க்கு வழங்கப்படுகிறது.மேலும் காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கும் வகையிலான இனக்கவர்ச்சிப் பொறி அசல் விலையான ரூ. 1400 லிருந்து 50சதவீத மானியத்தில் ரூ. 700-க்கு வழங்கப்படுகிறது.உடுமலை வட்டார விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 975 ஏக்கருக்கு இலக்கு நிறையிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் இணைந்து பலன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.