விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
x

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தப்பட்டது

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு இதுவரை 500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. 64 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும். காவிரியில் 93 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்கிறது. அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். வெள்ளத்தால் சூழப்பட்ட கிராம மக்களுக்கு குடிசை வீட்டிற்கு ரூ.25 ஆயிரமும், ஓட்டு வீட்டிற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்குவதோடு மறு சீரமைப்பு பணிகளை செய்து கொடுக்க வேண்டும். இப்பகுதிகளில் தோட்டப்பயிர்களான பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரமும், நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story