அறந்தாங்கி தாலுகா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


அறந்தாங்கி தாலுகா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அறந்தாங்கி தாலுகா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

வறட்சி நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்தில் கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் பேசுகையில், ''கல்லணை கால்வாய் பாசனத்தில் நமது மாவட்டத்தில் கிளை வாய்க்கால்கள், வடிகால் வாரிகளை தூர்வாருவதாக அறிவித்து நிதி ஒதுக்கியும் பணிகள் நடைபெறவில்லை.

வறட்சியால் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவில் விவசாயம் பொய்த்துவிட்டது. இதில் நிவாரணம் ஒதுக்கியதில் அறந்தாங்கி தாலுகா மட்டும் விடுபட்டுள்ளது. அறந்தாங்கி தாலுகா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.

குளங்களை தூர்வாருதல்

தென்னை விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தசெல்லதுரை பேசுகையில், ''பொதுப்பணித்துறையில் குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் குளம் தூர்வாரும் பணியை மேற்கொள்ளக்கூடாது'' என்றார். மிசா மாரிமுத்து பேசுகையில், ''காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார். இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி பேசுகையில், குரங்கு, மயில்கள் கிராமப்பகுதிகளில் விவசாய பயிர்களை முற்றிலும் அழிப்பதோடு வீடுகளிலும் புகுந்து உணவுப்பொருட்களை எடுத்துச்சென்று விடுகிறது. இவைகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மாவட்டத்தில் நில அளவையர்கள் பற்றாக்குறையால் நிலங்கள் அளவீடு செய்வது மாற்றும் உட்பிரிவு செய்யும் பணிகள் மிகவும் தாமதமாகிறது. எனவே நில அளவையர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய நடைமுறையை எளிமையாக்க வேண்டும்'' என்றார்.

கோரிக்கை மனுக்கள்

இதேபோல் விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசி, மனுவும் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story