கல்வித்தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
கல்வித்தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 9-வது மாநாடு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநாட்டை கட்சியின் மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், அரியலூர் மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராமநாதன் ஆகியோர் பேசினர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளராக விஜய்ராமதாசும், ஒன்றிய துணைச் செயலாளராக ராஜாபெரியசாமி மற்றும் கோபாலகிருஷ்ணனும், மகளிர் அணி பொறுப்பாளராக சுதாவும், நகர செயலாளராக(பொறுப்பு) பன்னீர்செல்வம் மற்றும் பல புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களை கடனை கட்டுமாறு கூறி அச்சுறுத்துவதாகவும், அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து பேசப்பட்டது. கல்வித்தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்திட்டு 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை மத்திய அரசு வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆண்டிமடத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம், மகளிர் போலீஸ் நிலையம் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக மாநாட்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மகளிர் அணி பொறுப்பாளர் சுதா நன்றி கூறினார்.