உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் கல்யாணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சம்மேளனத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் கலந்து கொண்டு பேசினர். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விடுதி பணியாளர் சங்கத்தின் மாநில நிறுவனர் தங்கவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை மீண்டும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை விரைந்து விசாரித்து நீதி வழங்கிட வேண்டும். பாலியல் சமத்துவத்தை வளர்தெடுக்க பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியை வழங்கிட வேண்டும். கல்வி வளாகங்கள், பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சம்மேளனத்தின் புதிய மாவட்ட தலைவராக அமுதாவும், செயலாளராக கல்யாணியும், பொருளாளராக திவ்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.