வளர்ச்சி திட்ட பணிகளை சட்டபேரவை பொது நிறுவனங்கள் குழு நேரில் ஆய்வு
தர்மபுரி:
தமிழ்நாடு சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது.
பொது நிறுவனங்கள் குழு
தமிழ்நாடு சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அ.சவுந்தர பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ. க்கள் அப்துல் சமது, ராமகரு மாணிக்கம், மு.பே.கிரி, ஆ.கோவிந்தசாமி, தி. சதன் திருமலைக்குமார், பூண்டி கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று தர்மபுரி மாவட்டம் வந்தனர்.
மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இந்த குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர் முதல் கட்டமாக ஒகேனக்கல்லில் மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஹட்சன் நிறுவனத்தில் உற்பத்தி பிரிவு மற்றும் சுத்திகரிப்பு பிரிவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து சோகத்தூரில் ரூ.16.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிப்காட் ரோடு ஆய்வு
தொடர்ந்து தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் ரோடு பணிகள், ஏ.ஜெட்டிஅள்ளியில் 400 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதி, மதிகோன்பாளையத்தில் ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தர்மபுரி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் மற்றும் தன்னாய்வு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அளவிலானஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேரவையில் சமர்ப்பிப்பு
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் அ. சவுந்தர பாண்டியன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 நிறுவனங்களில் உள்ள 9 தணிக்கை பத்திகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகிய நிறுவனங்களின் மீதான வினா பட்டியில் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அறிக்கை பெறப்பட்டு பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று கூறினார்.
கூட்டத்தில் தாட்கோ, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழுவின் தலைவர் வழங்கினார். இந்த ஆய்வு மற்றும் கூட்டத்தில் எம்.எல்.ஏ. க்கள் வெங்கடேஸ்வரன், சம்பத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.