ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில்சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் முதல்-அமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தில் ராயக்கோட்டை- அத்திப்பள்ளி சாலையில் இருதாளம் முதல் விருப்பாச்சி நகர் வரை, கெலமங்கலம் முதல் குந்துமாரனப்பள்ளி வரை ரூ.78 கோடி மதிப்பில் 7.60 கி.மீட்டர் நீள சாலையை இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கிருஷ்ணகிரி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையின் தரம், அளவுகள், அடர்த்தி மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் திருமால் செல்வன், ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர் மன்னன், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.