தர்மபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
தர்மபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
தர்மபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தையில் பொதுமக்களின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இதனால் உழவர் சந்தை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று மாலை திடீர் ஆய்வு செய்தார். பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், கழிப்பறைகள் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் தராசை ஆய்வு செய்த அவர் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகளையும் பார்வையிட்டார்.
காய்கறிகள் தரமானதாக உள்ளதா?...
மேலும் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமானதாக உள்ளதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் நிர்வாக அலுவலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் தர்மபுரி உழவர் சந்தையில் செல்போன் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.