எடப்பாடி அருகேபுதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


எடப்பாடி அருகேபுதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர்  ஆய்வு
x

எடப்பாடி அருகே புதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே புதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

குடிநீர் திட்டம்

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பனங்காடு பகுதியில், காவிரி கரை அருகே அமைந்துள்ள நீர் உந்து நிலையத்தின் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 29 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள இடங்கணசாலை, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 778 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் சோதனை ஓட்டமாக தற்போது பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடியை அடுத்த சாணாரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள துணை நீரேற்று நிலையத்தினை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். குடிநீர் வினியோகம் தொடர்பாக அங்கிருந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் இடங்கணசாலை நகராட்சி, இளம்பிள்ளை பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 620 குடியிருப்புகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. மீதமுள்ள குடியிருப்புகளுக்கும் மிக விரைவில் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும் குடிநீர் வினியோக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story