அகழாய்வு பணிகள் ஆய்வு
கீழடி,கொந்தகை பகுதிகளில் அகழாய்வு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி. இங்கு மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல் துறைகள் சார்பில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள்உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் கொந்தகையில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். கீழடிக்கு வருகை தந்தார். கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்டும் விவரங்களை கேட்டறிந்தார். பின்பு கொந்தகையில் நடைபெற்ற பணியை பார்வையிட்டு முதுமக்கள் தாழிகள் குறித்து விவரத்தினை கேட்டறிந்தார். அவரிடம் கீழடி அகழ்வாராய்ச்சியின் இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவியா ஆகியோர் விவரமாக எடுத்துக் கூறினார்கள். முதன்மை செயலாளருடன் திருப்புவனம் யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் அருள்ராஜ், தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.