529 பள்ளி வாகனங்கள் ஆய்வு
தர்மபுரி, பாலக்கோடு பகுதியை சேர்ந்த 529 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 5 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி, பாலக்கோடு பகுதியை சேர்ந்த 529 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 5 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தர்மபுரி, பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் தர்மபுரி சுற்றுலா மாளிகை பின்புறம் உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். அப்போது பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பஸ்சில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 204 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைபாடுகளுடைய 3 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுகளுடைய 22 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது தர்மபுரி தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்தும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு தீயணைப்பது என்பது குறித்தும் டிரைவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சித்ரா விஜயன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், ராஜ்குமார், வெங்கிடுசாமி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை பணியாளர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.
அரூர்
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் நம்பிப்பட்டியில் தனியார் பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. உதவி கலெக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் பெனாசிர் பாத்திமா, மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனங்களை ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக 325 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் குறைபாடுடைய 24 வாகனங்கள் கண்டறியப்பட்டு ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் 2 வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கண்காணிப்பாளர் விஜயகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.