ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மழை வெள்ளம் புகுந்தது: கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு-நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்


ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மழை வெள்ளம் புகுந்தது: கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு-நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்
x

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்குள் மழை நீர் புகுந்ததால் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

நாமக்கல்

ராசிபுரம்:

ஆஸ்பத்திரியில் தண்ணீர் புகுந்தது

ராசிபுரத்தில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பெண்கள் மற்றும் ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவுகள், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தும் பிரிவு, சமையல் அறைகளை பார்வையிட்டார். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 49 நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மழை வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, தலைமை டாக்டரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்

கலெக்டர் பேட்டி

அதன் பிறகு கலெக்டர் ஸ்ரேயாசிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்து உள்ளது. இதனால் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 4 வார்டுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தண்ணீரால் பாதிக்கப்பட்ட 49 நோயாளிகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. 2019-ம் ஆண்டு இதேபோன்று மழைநீர் சூழ்ந்தது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் நோயாளிகள் சிரமம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும்.

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறினார்.

தட்டான்குட்டை ஏரி

ராசிபுரம் அருகே உள்ள தட்டான்குட்டை ஏரி மழை வெள்ளத்தால் நிரம்பி ஏரிக்கு அருகில் உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கலெக்டர் நேரில் சந்தித்து, பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், நகராட்சி தலைவர் கவிதா, ஆணையாளர் அசோக்குமார், வேளாண் உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story