நடுகற்கள் குறித்து மாணவ, மாணவிகள் கள ஆய்வு
அகரத்தில் நடுகற்கள் குறித்து மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
காவேரிப்பட்டணம்
அகரத்தில் நடுகற்கள் குறித்து மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
கள ஆய்வு
தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, உலக மரபு வாரத்தை கொண்டாடி வருகிறது. அதன்படி, நேற்று காவேரிப்பட்டணம் அடுத்த அகரம் கிராமத்தில், வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தர்மபுரி மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த களப்பயணத்தில், அகரம் அடுத்த தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னந்தோப்பில் அமைந்துள்ள பலவகையான நடுகற்கள் குறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் நடுகற்களின் வகைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை குறித்து விளக்கி கூறினர்.
விழிப்புணர்வு
இங்கு மாடுபிடி சண்டையில் இறந்த வீரர்களுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் போன்ற பல காரணங்களுக்காக உயிரிழந்த நமது முன்னோர்களின் நடுகற்கள் காணப்பட்டன. இவற்றின் பொருள் என்ன, இவற்றை எவ்வாறு பாதுகாப்பது, நமது மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேராசிரியர்கள் கிருத்திகா, சரண்யா உள்பட 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.