புதிய தொழில்நுட்ப முறையில் மலர் சாகுபடி
சூளகிரி அருகே புதிய தொழில்நுட்ப முறையில் மலர் சாகுபடியை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
சூளகிரி
சூளகிரி ஒன்றியம் சின்னாரன்தொட்டி ஊராட்சி கெதலன்தொட்டி கிராமத்தில் விவசாயிகள் புதிய புனே தொழில்நுட்ப முறையில் மலர் சாகுபடி செய்துள்ளனர். இதனை, அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலர் சாகுபடியாளர்கள் புதிய தொழில்நுட்ப முறையை கையாண்டு அதிக மகசூல் மற்றும் வருமானம் பெறுகின்றனர். தற்போதுள்ள பசுமைக்குடில் முறையில் 1 ஏக்கர் பரப்பளவில் 32 ஆயிரம் செடிகள் மட்டுமே வளர்க்கலாம். ஆனால் இந்த புதிய தொழில்நுட்ப முறையில் 1 ஏக்கரில் 42 ஆயிரம் செடிகள் வளர்க்க முடியும். இப்பகுதியில், விவசாயிகள் அதிகளவில் பசுமைக்குடில்கள் அமைத்து, புதிய தொழில்நுட்பமுறையை கடைபிடித்து வருவாயை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது, சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம், துணை செயலாளர் சின்ன அப்பையா, கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.வி.எஸ்.மாதேஷ், அத்திமுகம் ஊராட்சி தலைவர் சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.