பன்றி பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி அருகே பன்றி பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காட்டுப்பன்றிகள் இறந்தன. அங்கு இறந்த பன்றிகளின் உடல்களை கைப்பற்றி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேசம் போபாலில் உள்ள, இந்திய கால்நடை நோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால், காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்றிகள் பண்ணையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, வேப்பனப்பள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது பன்றி பண்ணையில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் ராஜேந்திரன், நோய் புலனாய் பிரிவு உதவி இயக்குனர் அருள்ராஜ், குந்தாரப்பள்ளி கால்நடை உதவி மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறி, கிருமி நாசினிகள் தெளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.