உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

உணவகங்களில் ஆய்வு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்பேரில் தர்மபுரி நகராட்சி, கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, செந்தில் நகர், நேதாஜி பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்களில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு சில உணவகங்களில் குளிர்பதன பெட்டிகளில் இருந்து பழைய இருப்பு வைத்திருந்த கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா் ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், 2 உணவகங்களில் செயற்கை நிறமேற்றி பயன்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

நடவடிக்கை

தர்மபுரி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள 2 உணவகங்கங்களுக்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளில் சாம்பார், சட்னி, சூடான உணவுப் பொருட்கள் பார்சல் செய்வதை தவிர்க்க வேண்டும். தவறினால் அபராதம் விதித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.

பஸ் நிலைய பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், குளிர்பான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் பழக்கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில கடைகள் உரிய உரிமம் பெறாமலும் காலாவதியான உணவு பாதுகாப்பு சான்றிதழ் வைத்திருந்து வணிகம் செய்வதை கண்டு எச்சரித்து உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு விண்ணப்பித்து சான்று பெற்று நுகர்வோர் காணும் வகையில் வைத்து வணிகம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

அபராதம்

ஒரு சில பீடா கடைகள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் தின்பண்டங்கள், அச்சிட்ட காகிதங்களில் பொட்டலமிட்டு கொடுத்த பலகாரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகளில் உணவுப்பொருட்களை பார்சல் செய்து கொடுத்ததாக உணவகங்கள், பேக்கரி மற்றும் பெட்டிக்கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.


Next Story