சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை பணிகள்
கிருஷ்ணகிரி ஒன்றியம், கே.பூசாரிப்பட்டி முதல் பெரிய கோட்டப்பட்டி வரை ரூ.62 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெயகுமார், பத்மாவதி, உதவி பொறியாளர்கள் ரியாஸ் முகமது, பிரவீன்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகள் அடங்கும். 2022-23-ம் நிதியாண்டில் தொழில் நகரமான ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் 5 பணிகள் 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மாத இறுதிக்குள்...
இதேபோல் தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 மாவட்ட சாலைகள் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி அணை சாலை, பர்கூர் சிந்தகம்பள்ளி சாலை, பண்ணந்தூர், பந்தாரஅள்ளி, காரப்பட்டு, கல்லாவி, போச்சம்பள்ளி, கப்பல்வாடி, ஒரப்பம், செந்தாரப்பள்ளி சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெட்டமுகிலாளம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 11 சாலை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதேபோல் 2022-23-ம் ஆண்டில் திட்டம் சாரா பணிகள் மூலம், பூசாரிப்பட்டி, பெரியகோட்டப்பள்ளி, கரடிஅள்ளி, நல்லூர், வரட்டனப்பள்ளி, வெலகலஅள்ளி, பீர்பள்ளி, அத்திகானூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 14 சாலைகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.