குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
நாமக்கல்:
குமாரபாளையத்தில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.
அவசர சிகிச்சை
மேலும் காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தை சுற்றிலும் இரண்டடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டனர்.
அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், அவசர சேவை ஊர்தி (ஆம்புலன்ஸ்) வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதையும், பார்வையாளர்கள் அமருவதற்கு இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டனர்.
வீரர்கள் பாதுகாப்பு
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் பாதுகாப்புக்காக தேங்காய்நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வில், உதவி கலெக்டர் கவுசல்யா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பாஸ்கர் உள்பட அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.