பாலக்கோட்டில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை கடைகள், பழரச விற்பனை கடைகள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள், மாம்பழம் குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார். இதையடுத்து 2 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் 10 ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. திறந்த நிலையில் அதிக வெயில் பட்ட நிலையில் குளிர்பானங்கள் வினியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் ரூ.1,000 விதிக்கப்பட்டது.